அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கிடையே, கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து, பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், மாணவர்கள் மத்தியில் குழப்பங்கள் நீடித்து வந்தது.
குறிப்பாக, பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் வேலைக்கு தேர்வாகியும் செமஸ்டர் தேர்வு எழுத முடியாத காரணத்தால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை இந்த மாதம் இறுதிக்குள் ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் கல்லூரி வேலை நாட்கள் குறைவாக இருந்ததால் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்கவில்லை. இதனால் 5 அலகுகளுக்குப் பதில், 4 அலகுகளுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
உள்மதிப்பீடு மற்றும் புராஜெக்ட் பணிகளுக்கு 70% மற்றும் ஆன்லைன் தேர்விற்கு 30% மதிப்பெண்கள் கொடுக்கப்படவிருகிறது. இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு நிலைமை சீரான பிறகு எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.