புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை அவ்விரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாட்டின் சந்தையும் தொடர்ந்து இறங்கு முகமாகவே சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை ஓரளவு குறைந்திருப்பதால் கச்சா எண்ணெய் விலையும் சற்று குறைந்திருக்கிறது. இது மட்டுமில்லாமல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது அது 70.82 ரூபாய் என்ற அளவில் இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிந்த வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 41,599 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி முடிவடைந்தது. அதனையடுத்து இன்று காலை ஆரம்பித்த வர்த்தகத்தில் தொடக்க நிலையில் சென்செக்ஸ் 41,788 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,859 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி நிறைவடைந்துள்ளது.

அதாவது நேற்று முடிவடைந்த புள்ளியை விட, இன்று முடிவடைந்த வர்த்தகமானது 259 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதுபோலவே மும்பை பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 12,296 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,329 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி முடிவடைந்திருக்கிறது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயிள்ளது. பிஎஸ்இ-யில் வர்த்தகமான 2,711 பங்குகளில் 1,545 பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 984 பங்குகள் இறக்கத்திலும், 182 பங்குகள் எந்தவொரு விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகியுள்ளன. இதில் 2,711 பங்குகளில் 79 பங்குகளின் விலையானது 52 வார அதிகத்திலும், 82 பங்குகளின் விலையானது 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகியுள்ளது.

குறிப்பாக இன்ஃபோசிஸ்,கோல் இந்தியா, கெயில்,இண்டஸ் இண்ட் பேங்க், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகியுள்ளன. அதேபோல டிசிஎஸ்,யெஸ் பேங்க், யூபிஎல், பார்தி இன்ஃப்ராடெல், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின.

 

Leave a Comment