கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் கொளுத்த துவங்கிவிடும். எனவே, மின் விசிறி, ஏசி, ஏர் கூலர் போன்றவகளின் பயன்பாடு அதிகரித்து விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். எனவே, மக்களுக்கு கூடுதலான மின்சாரத்தை அரசு கொடுக்க வேண்டும். அது முடியாமல் போகும்போது கோடை காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு அறிவிக்கப்படும்.
மின் வெட்டு இருந்தால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். ஒருமுறை திமுக அரசு தோல்வி அடைந்து அதிமுக ஆட்சியில் வருவதற்கே இந்த மின் வெட்டு காரணமாக அமைந்தது. அந்த அளவுக்கு தமிழகத்தில் மின்வெட்டு என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
எனவே, தற்போது தமிழகத்தில் கோடை காலம் துவங்கிவிட்டதால் இந்த வருடமும் மின் வெட்டு இருக்குமா என்கிற கலக்கம் மக்களிடம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள மின்சார துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வ்ய் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கோடைக்காலம் வந்துவிட்டால் தமிழகத்திற்கு 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அதாவது ஏப்ரல், மே மாதங்களில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். அதற்கான டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. எனவே ,கோடை காலத்தில் எந்த தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு யூனிட் 9 அல்லது 9 ரூபாய்க்கு வாங்கும் திட்டம் இருக்கிறது. யூனிட் 12 முதல் 15 ரூபாய்க்கு வாங்கப்படுவதாக பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். அதில் உண்மை இல்லை. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. கோடை காலத்தை சமாளிக்க மின்சார வாரியம் தயாராக உள்ளது ’ என அவர் கூறினார்.