செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை நிறைவு! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அமலாக்கத்துறையினர்
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.அப்போது திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்று அவரது மனைவி மேகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும்.இது சட்ட விரோத கைது இல்லை என்று தெரிவித்தனர்.மேலும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று அமலாக்கத்துறையினருக்கு அனுமதி வழங்கினர்.
இதையடுத்து அமலாக்கத்துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனை விசாரித்த நீதிபதி அல்லி,செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.மேலும் 12 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பதற்கான உத்தரவு புழல் சிறை நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.இதையடுத்து சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீர்ப்பு வழங்கிய அன்று இரவே புழல் சிறையிலிருந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கத்திற்கு அழைத்து வந்தனர்.மேலும் அன்றே விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.மேலும் இது தொடர்பாக ஐம்பதிற்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்தனர்.இந்த விசாரணை இரவு 11 மணி வரை நடைபெற்றது.முதல் நாள் விசாரணை முடிந்த பிறகு செந்தில் பாலாஜி அங்கேயே உறங்கினார்.
பிறகு அடுத்த நாள் அதாவது நேற்று காலை 5:30 மணியளவில் கண் விழித்தார்.இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு வக்கீல் ஒருவர் மூலம் மாற்று துணிகள் மற்றும் பிரஷ்,பேஸ்ட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை அவரது வீட்டிலிருந்து கொடுத்து விட்டனர்.இதனை தொடர்ந்து வக்கீலை அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் கொண்டு வந்த பொருட்களை நுழைவாயில் முன் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் செந்தில் பாலாஜிக்கு தேநீர் மற்றும் காலை 9 மணிக்கு உணவு கொடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் முகாமிட்டிருந்த சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதித்தனர்.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 வது நாள் விசாரணையை தொடங்கினர்.
சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது குறித்து கேள்விகளை எழுப்பிய அதிகாரிகள் இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் பற்றிய விவரங்கள் குறித்த அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.மேலும் அவற்றிற்கு செந்தில் பாலாஜி கூறிய பதில்களை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.உணவு இடைவேளைக்கு பிறகு அதிகாரிகள் மீண்டும் தங்கள் விசாரணையை மேற்கொண்டனர்.இந்நிலையில் நேற்று மதியம் தொடங்கிய விசாரணை இரவு வரை தொடர்ந்தது.
மேலும் இந்த சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரும் சேர்க்கப்பட்டுள்ளார்.செந்தில் பாலாஜியிடம் விசாரணை முடிந்த பிறகு நீதிமன்ற அனுமதி மூலம் அவரது தம்பியிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகம் சுற்றி மத்திய பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் அலுவலகம் அமைந்துள்ள சாஸ்திரி பாவனை சுற்றி நுங்கம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை பார்க்க வழக்கறிஞர்,செய்தியாளர்கள் என்று ஒருவரையும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.