‘உடல் எடையைக் குறைத்தல் மாடல் ஆகி சம்பாதிக்கலாம்’ ரிஷப் பண்ட்டுக்கு ஐடியா கொடுக்கும் பாக். வீரர்!
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சமீபகாலமாக அணிக்கு தூணாக விளங்கி வருகிறார்.
தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ரிஷப் பண்ட் குறித்து தன்னுடைய யுடியூப் சேனலில் பேசியுள்ளார். அதில் “ரிஷப் பண்ட் ஒரு தைரியமான வீரர். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று கொடுத்த அவர், தற்போது இங்கிலாந்தில் தொடரை வென்று கொடுத்துள்ளார். பண்ட் சிறிது எடையைக் குறைக்க வேண்டும். அப்படி செய்தால் அவர் மாடல் ஆகலாம். அதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம். அவர் அழகாகவும் இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் “இந்தியாவில் மிகப்பெரிய சந்தை உள்ளது. அவர் மாடலானால் அவர் மீது முதலீடுகள் வந்து குவியும்” என்று கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் தோனி, மற்றும் கோலி இதுபோல பல நிறுவனங்களுக்கு தூதுவர்களாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.