“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம்

Photo of author

By Vinoth

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம்

உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் அக்தர்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தனது இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதற்காக அவர் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து பகிர்ந்துள்ள வீடியோவில், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அக்தர் தனது ரசிகர்களுக்கு உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்தார். தற்போது தான் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், அவர்களின் பிரார்த்தனை தனக்கு தேவை என்றும் சோயப் கூறினார்.

அந்த வீடியோவில் அவர் “ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், கடந்த 11 ஆண்டுகளாக அவர் வலியில் இருக்கிறேன், இது வேகமாக பந்துவீசுவதால் ஏற்படும் ஆபத்து, ஆனால் பாகிஸ்தானுக்காக அதை செய்வது மதிப்புக்குரியது நான் இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் விளையாடியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்தால் நான் சக்கர நாற்காலியில் செல்ல நேரிடும் என்பதை நான் அறிந்திருந்தேன். அதனால்தான் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன், ” என்று அக்தர் வீடியோவில் கூறினார்.

மேலும் தான் தற்போது வலியில் இருப்பதாகவும், அதனால் உங்களின் பிராத்தனை வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான அக்தர் உலகின் அதிவேகப் பந்தை வீசியவர் என்ற பெருமைக்குரியவர். தன்னுடைய காலத்தில் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் அசுர வேகப் பந்துகளை வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.