ஈரோடு மாவட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், திமுகவின் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர் ஒருவர் பங்கேற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக 1.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் மற்றும் ஆய்வகத்திற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தனர்.
இந்த பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா பங்கேற்றுள்ளார். இந்த செய்தி திமுக மற்றும் அதிமுக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2006 முதல் 2011 திமுகவின் ஆட்சிக் காலத்தில் திமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்கேகேபி ராஜா. அப்போது
இவரின் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட புகார்கள் எழுந்ததால், ஆட்சியில் இருந்த சில ஆண்டுகளிலேயே இவரின் பதவி பறிக்கப்பட்டது.
அதன்பிறகு அவர் திமுகவின் மாவட்ட செயலாளர் செயலாளராக இருந்து வந்துள்ளார். அதன்பிறகு மேலும், 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதன் காரணமாக இவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களாகவே திமுகவின் நிகழ்ச்சிகள் மற்றும் திமுக கூட்டங்களில் என்கேகேபி ராஜா வை காண முடியாத சூழல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், அதிமுக அமைச்சர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் என்கேகேபி ராஜா பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த செயல் காரணமாக, முன்னதாக திமுக கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த என்கேகேபி ராஜா, தற்போது அதிமுகவில் இணைவதற்கான முன்னோட்டமாகத்தான் இது இருக்கும் என கொங்கு பெல்ட் மண்டல அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.