அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

0
111

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரசியல் கட்சிகள் சார்பாக பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று விறுவிறுப்பாக வேலைகள் ஒருபுறம் நடந்து வருகிறது.அதேபோல தேர்தல் ஆணையம் சார்பாக நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் துணை இராணுவப் படை போன்றவற்றை வைத்து வாகன தணிக்கை திடீர் சோதனை போன்றவை நடந்து வருகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பண பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கெடுபிடிகள் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கடலூரில் நடிகர் கமலஹாசன் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டுவந்த பணத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.அதோடு அந்தக் கட்சியின் மாநில பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சிக்கியது. இதனையடுத்து தஞ்சாவூரில் பிரச்சாரம் மேற்கொண்ட கமலஹாசனின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு துணை ராணுவப் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இப்படி பல அதிரடி சோதனைகளையும், நடவடிக்கைகளையும், தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அந்த விதத்தில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ .வேலு அவர்களின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமாக இருக்கும் ஒரு கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.விராலிமலை தொகுதியில் ஆளும் கட்சியான அதிமுக சார்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் திமுக சார்பாக எம் பழனியப்பன் ஆகியோர் களம் காண இருக்கிறார்கள். இந்த தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அந்த தொகுதி மக்களுக்கு பல பொருட்களை விநியோகம் செய்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், விராலிமலையில் கல்லூரி ஊழியர் வீரபாண்டி அவர்களின் வீட்டில் வருமான வரித் துறை ஊழியர்கள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வீரபாண்டியனுக்கு சொந்தமான 6 வீடுகள் உள்ள ஒரு குடியிருப்பில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு விராலிமலையில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் வெற்றியிலும் இந்த வருமான வரித்துறை சோதனை எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.