’இந்தியன் 2’ விபத்து குறித்து சிம்புவின் சாட்டையடி அறிக்கை!

0
138

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் ட2’ படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே. இந்த விபத்தில் இருந்து கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிம்பு இதுகுறித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும். பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous articleதுப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கமா? அதிர்ச்சி தகவல்
Next articleதூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு