நடராஜன் மற்றும் முகமது சிராஜ்க்கு இடையே உள்ள ஒற்றுமைகள்!

Photo of author

By Parthipan K

நடராஜன் மற்றும் முகமது சிராஜ்க்கு இடையே உள்ள ஒற்றுமைகள்!

Parthipan K

Updated on:

ஏழையாக பிறந்தால் என்ன‌ நடராஜன் மற்றும் சிராஜ் போல நீங்களும் சாதனை படைக்கலாம் என்று ஆர்வத்தை தூண்டும் வகையிலேயே இருவரின் கடந்த கால வாழ்க்கையும் அமைந்துள்ளது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது திறமையை கொண்டு கிரிக்கெட்டில் விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஆட்ட நாயகர்கள் நடராஜன் மற்றும் முகமது சிராஜ்

சிராஜ் ஆட்டோ ஓட்டுநரின் மகன், நடராஜன் கிராமத்தில் சில்லி சிக்கன் கடை நடத்தும் தந்தையின் மகன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இருவருமே கிரிக்கெட்டின் மேல் கொண்ட ஆர்வத்தாலும், அவர்களின் விடாமுயற்சியாலும் இன்று உலகமே போற்றும் வகையில் வளர்ந்துள்ளார்கள்.

வேகப்பந்து வீச்சாளரான இருவருமே ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்ததால், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்பு முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேற இருவருக்குமே இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மிகவும் சிறப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு இருவருமே முக்கிய பங்காற்றினார்கள்.

யார்க்கர் நாயகன் நடராஜனுக்கு 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தும் கிரிக்கெட்டின் மேலுள்ள ஆர்வத்தினால் ஆஸ்திரேலியா தொடருக்கு விளையாட ஆஸ்திரேலியா வந்தடைந்தார். இதேபோல் முகமது சிராஜ் அவரின் தந்தை கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இறந்துவிட்டார். தந்தையின் இறுதிச் சடங்குக்கு கூட செல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி  கிரிக்கெட்டின் மேலுள்ள தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. காரணம் ஆஸ்திரேலிய அணியை தி காப்பா மைதானத்தில் 32 வருடங்களாக யாருமே வென்றது கிடையாது.ஆனால் ரஹானே தலைமையில் விளையாடிய இளம் இந்திய அணி வென்று காட்டி மிகப்பெரிய சாதனையை வரலாற்றில் பதித்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் முடிவு பெற்றதால், தாயகம் திரும்பிய நடராஜன் மற்றும் சிராஜ் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடராஜனின் சொந்த ஊரான சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்திற்கு அவர் வந்த போது அருகிலுள்ள மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து சந்தோஷமாக வரவேற்றார்கள். இதேபோல் ஹைதராபாத் வந்த முகமது சிராஜ் முதலில் தனது தந்தையின் சமாதிக்கு சென்று தனது அஞ்சலியை செலுத்தினார்.

இவர்களை போல நீங்களும் உங்களுடைய ஏழ்மையான நிலையைக் கண்டு கலங்காமல் உங்களுடைய வெற்றி இலக்கை நோக்கி கடுமையாக உழையுங்கள், வாழ்வில் சாதனை படையுங்கள் என பலரும் இளைஞர்களுக்கு இவர்களை உதாரணமாக குறிப்பிட்டு பேசி வருகிறார்கள்