நடிகர் ராதாரவிக்கு எதிராக பிரபல பாடகி போர்க்கொடி
திமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ராதாரவி ஒரு திரைப்பட விழாவின் போது நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இவரது இந்த சர்ச்சை பேச்சை எதிர்த்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கண்டனங்கள் எழுந்தன.
இதற்கு முன்பு திமுகவினர் மீது இதை விட மோசமான விமர்சனங்கள் எல்லாம் எழுந்த போது எதையும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற திமுக தலைமை நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் ராதாரவியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினர்.
திமுக தலைமையின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் இருந்த நடிகர் ராதாரவி விரைவில் வேறு கட்சியில் இணைவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அனைவரின் எதிர்பார்ப்பையும் உண்மையாக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் நடிகர் ராதாரவி அதிமுகவில் இணைந்து கொண்டார். இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் அதிமுகவில் சேர்ந்து 6 மாதமே ஆன நிலையில் தற்போது அங்கிருந்தும் விலகிய நடிகர் ராதாரவி, இன்று திடீரென தேசிய கட்சியான பாஜகவில் இணைந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வந்த நடிகர் ராதாரவியை எந்த அடிப்படையில் பாஜக ஏற்று கொண்டது. மேலும் இதன் மூலமாக பெண்கள் பாதுகாப்பிற்காக பாஜக கூற விழைவது என்ன என்பது குறித்து பிரபல பாடகியான சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைமையிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன் மூலமாக நடிகர் ராதாரவிக்கு எதிராக பாடகி சின்மயி மீண்டும் போர்க்கொடி தூக்கியிருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தரப்பு இதற்கு என்ன காரணத்தை கூறப் போகிறது என்றும் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.