Singer Kalpana : பல படங்களுக்கு டிராக் பாடியவரும், திரைப்படங்களில் பாடியவருமான பாடகி கல்பனா ராகவேந்தர் நேற்று தற்கொலைக்கு முயன்றார் என்கிற செய்தி இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவரை 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இடம் பெற்ற கொடி பாக்குற காலம் பாடலை பாடியதும் கல்பனாதான்.
இதுபோக விஜய் டியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் சிங்கர் மற்றும் ஸ்டார் சிங்கர் ஜுனியர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்தார். மேலும் சூப்பர் சிங்கர் சீசம் 10 நிகழ்ச்சியிலும் ஜட்ஜாக இருந்தார். தமிழ் போக பல தெலுங்கு படங்களிலும் பாடியிருக்கிறார். மேலும், தெலுங்கு மொழி டிவி நிகழ்ச்சிகளிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கு ஜட்சாக இருந்தார்.
இவர் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில்தான், இவரின் வீட்டு 2 நாட்களாக உட்புறம் தாளிடப்பட்டிருந்தது. எனவே, உறவினர்கள் ஹைதராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கல்பனா வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்டது.
கல்பனாவுக்கும் அவரின் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டதாகவும், மன உளைச்சலில்தான் கல்பனா தற்கொலை செய்யும் முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த செய்தியை கல்பனாவின் மகள் மறுத்திருக்கிறார்.
இன்னும் 2 நாட்களில் என் அம்மா டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார். அவருக்கும் என் அப்பாவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. உடல்நலப்பிரச்சனை காரணமாக அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். அது கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது. அதனால் மயக்கமடைந்தார். அவர் நன்றாக இருக்கிறார். அவரை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.