குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி!
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக என்னை முதலமைச்சர் நியமித்திருக்கிறார். 33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த எனக்கு இந்த பதவியை வழங்கி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மக்களுக்கான பாடப்புத்தகத்தை பாடநூல் கழகத்தின் மூலம் உருவாக்கி கல்வியை சுமையாக நினைக்காமல், பாடப்புத்தகங்களை மகிழ்ச்சி அளிக்கும் புத்தகமாக மாற்றி சாதாரண குழந்தைகள் அதை விரும்பி படிப்பது போல மாற்றி அமைக்க வேண்டும்.
இதில் பல புதுமைகளை படைக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தொலைக்காட்சி செய்திகளிலும் கூட ஒன்றிய அரசு என்றுதான் செய்தி வாசிக்கப்படுகிறது. எனவே பாடத் திட்டங்களிலும் மத்திய அரசு என்ற பகுதியை மாற்றி, அடுத்த பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடும் போது ஒன்றிய அரசு, என்ற வார்த்தையை பயன்படுத்தி அதை நடைமுறைக்குக் கொண்டுவர பாடநூல் நிறுவனம் முழுமையாக பாடுபடும் என்றும் கூறினார்.
மேலும் நான் பெண்களை இழிவாக பேசியதாக பிரதமர் உட்பட என்னை மேடைகளில் பலர் விமர்சித்தனர். அந்தக் கருத்து நான் பலமுறை தொலைக்காட்சிகளில் பேசிய கருத்து தான் ஆனால் அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து கொண்டு ஏதோ நான் இருப்பு பற்றி பேசியதாகவும், பெண்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தியது போலவும், ஒரு போலி குற்றச்சாட்டை கூறி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
பாடநூல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பாமகவின் டாக்டர். அன்புமணி ராமதாஸ் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசியதையும், அவர் பயன்படுத்திய வார்த்தைகளையும், பார்க்கும்போது முன்னாள் முதலமைச்சர் அவர்களை டயர்நக்கி என்று அவர் கூறியதை சுட்டிக்காட்ட வேண்டும். அந்த வார்த்தையை விட பெரிய அளவில் பெண்களை அவமதிக்கும் படி நான் பேசவில்லை என்றும் கூறினார்.