கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி

Photo of author

By Vijay

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார். 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதை அடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆட்சியை பிடிப்பதற்கு 113 தான் மேஜிக் எண். ஆனால் கர்நாடகாவில் பாஜக இதுவரை தனிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆனால் இம்முறை கர்நாடக மக்கள் தெளிவாக உள்ளனர். இதற்காக நாங்கள் எதுவும் ஆப்ரேஷன் செய்யவில்லை.
பாரத பிரதமர் மோடி கர்நாடகாவிற்கு அவ்வளவு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். எந்த ஒரு தலைவரையும் நாங்கள் ஒதுக்கவில்லை. மாநிலத் தலைவர் முதல் தேசிய தலைவர் வரை அனைவரையும் முன்னிறுத்தி தான் தேர்தலை முன்னெடுத்து செல்கிறோம்.
கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜகவை நமக்கான கட்சி என நினைக்கின்றனர். பெங்களூருவில் 12 தொகுதிகளுக்கு மேல் தமிழ் மக்களே உள்ளனர். அவர்களிடம் நேரில் சென்று வாக்கு சேகரிக்க உள்ளோம். வகுப்பறையில் ஹிஜாப் மட்டுமல்ல, காவி உடையும் வேண்டாம் என்கிறோம்.
கர்நாடகா போன்று தமிழ்நாடு அரசியலில் கண்ணியம் கடைபிடிக்கப்படுவதில்லை. தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் சூடாக இருக்கும். கர்நாடகாவில் தனிநபர் தாக்குதல் இல்லை. என்றார்.
இதனிடையே திமுக பற்றி பேசிய அண்ணாமலை, நான் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிப்பேன். திமுக அமைச்சர்களின் ஊழல் விஷயத்தில் சிபிஐ விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி, தொடக்க கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஊழல் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது நோக்கம்.