வறட்சியாக காட்சியளிக்கும் சிறுவாணி அணை! இன்னும் 15 நாட்கள் மட்டும் தான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கும்!
கோவை மாவட்டம் சிறுவாணி அணை வறண்டு காட்சியளிப்பதால் அங்கு இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் 15 நாள்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கும் அதன் சுற்றுவட்டார உள்ளாட்சி பகுதிகளுக்கும் சிறுவாணி அணைதான் குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருக்கின்றது. சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி ஆகும். இதில் 45 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்க கேரளா அனுமதி அளிக்கின்றது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் சிறிது சிறிதாக குறைந்து தற்போது அரை அடிக்கும் கீழ் சென்று விட்டது.
சிறுவாணி அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம் பாளமக வெடித்து காணப்படுகிறது. கோவை மாநகராட்சியின் நீர் உறிஞ்சும் கிணற்றில் மொத்தம் நான்கு வால்வுகள் உள்ளன. அவற்றில் மூன்று வால்வுகள் தண்ணீர் மட்டத்துக்கு மேல் காணப்படும் நிலையில் நான்காவது வால்வு வழியாகத்தான் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
சிறுவாணி அணையில் தினமும் 3.3 கோடி லிட்டர் தண்ணீர் குடிப்பதாற்காக எடுக்கப்படுகின்றது. இந்த வறட்சியானது தொடர்ந்து ஏற்பட்டால் சிறுவாணி அணையில் இருக்கும் குடிநீரை இன்னும் 15 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக சிறுவாணி அணையை ஒட்டிய பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளது. இந்த நிலையிலும் சிறுவாணி அணை அருகே எந்த தாக்கத்தையும் இந்த மழை ஏற்படுத்தவில்லை.
இன்னும் சில நாட்கள் கனமழை பெய்யாமல் இருந்தால் கோவை மாநகராட்சிக்கும் வழியோர உள்ளாட்சிகளுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது சிரமம் ஏற்படும் என்று அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.