சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்!

0
190

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்!

சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளரும், ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் உரிமையாளருமான ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தனியார் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் அதன்பின் சினிமாவுக்குள் நுழைந்து தற்போது உள்ள தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார்.

இவர் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அதன்பின் இவருக்கான படங்கள் அடுத்தடுத்து குவியத் தொடங்கின. அதனை தொடர்ந்து இவர் நடித்த வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

அந்த வகையில் முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் மிஸ்டர் லோக்கல். இயக்குனர் ராஜேஷ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளமாக பேசப்பட்டது. இதில் ரூ.11 கோடி மட்டுமே சிவகார்த்திகேயனுக்கு ஞானவேல் ராஜா கொடுத்துள்ளார். அதிலும் அவருக்கு அளித்த தொகையில் வருமானவரி பிடித்தம் செய்து அளித்ததாகவும் ஆனால் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஞானவேல் ராஜா வருமானவரி துறையிடம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனக்கு தர வேண்டிய பாக்கி தொகையை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் தனக்கு தர வேண்டிய பாக்கி சம்பளத்தை அளிக்கும்வரை ஞானவேல் ராஜா மற்ற படங்களில் முதலீடு செய்ய தடை விதிக்குமாறும் தாக்கல் செய்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!!
Next articleஅரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்! விடியல் அரசின் தரமற்ற செயல்!