Ilayaraja: தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 80களில் இவரின் இசையில்தான் பல திரைப்படங்கள் உருவானது. இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த காலம் உண்டு. தமிழ்நாட்டில் ஹிந்தி பாடல்களை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் இளையராஜா வந்த பின்னர்தான் தமிழ் பாடல்களை கேட்க துவங்கினார்கள்.
அப்படியொரு முக்கிய மாற்றத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்த பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இளையராஜாவின் இசை பலரின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருப்பதே அவரின் இசை செய்த மிகப்பெரிய சாதனை. இப்போதும் அவரின் பாடல்கள் பல இடங்களிலும் ஒலித்துகொண்டுதான் இருக்கிறது.
சினிமாவிற்கு இசையமைப்பது மட்டுமின்றி இசைக்கச்சேரிகளை நடத்துவது, சிம்பொனி அமைப்பது என பல விஷயங்களை 83 வயதிலும் ஆக்டிவாக செய்து வருகிறார். இளையராஜா சிம்பொனி இசை அமைக்க வேண்டும் என பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உள்ளிட்ட பலரும் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.
எனவே, அதற்கான பணிகளில் இறங்கிய இளையராஜா வருகிற 8ம் தேதி சனிக்கிழமை மேற்கத்திய பாரம்பரிய இசையான சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்யவுள்ளார். எனவே, அவருக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். சில முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்றும் வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.

முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரை தொடர்ந்து விடுதலை கட்சி தொல்.திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து சொன்னார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்து சொல்லியதோடு இளையராஜாவுக்கு ஒரு இசைக்கருவியையும் பரிசாக கொடுத்தார்.
தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் இளையராஜாவை நேரில் சந்தித்து சிம்பொனி இசைக்காக வாழ்த்து கூறினார்.