ஆறு எம்பிக்கள் மீது பாய்ந்தது உரிமை மீறல் தீர்மானம்!

Photo of author

By Parthipan K

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மசோதாக்களை எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பினை மீறியும் அரசு நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் மாநிலங்களவையின் மண்டபத்துக்கு வருகைதந்த அரசுக்கு எதிரான முழக்கங்களை பெருமளவில் எழுப்பினர்.அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து துணை சபாநாயகர்  முகத்தில் எறியவும் சபாநாயகரின் மைக்கை உடைக்கும் முயற்சிகளிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டனர்.

அவை காவலர்கள் அமளியில் ஈடுபட்ட எம்பிகளை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்ற முயற்சித்தபோது சில எம்பிக்களுக்கு  காயமும் ஏற்பட்டது. ராஜ்ய சபாவின் துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.ஏனெனில் விவசாய மசோதாக்கள்  மீதான குரல் வாக்கெடுப்பில் குளறுபடி நடந்திருப்பதாகவும் மசோதாவிற்கு போதுமான ஆதரவு இல்லை என்ற இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் அமளியில் ஈடுபட்ட எம்பி களின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை தனது வீட்டில் நடத்தினார்.வெங்கையா நாயுடு அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை கிழித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கலந்து ஆலோசித்து வருகிறார்.

மாநிலங்களவையில் துணை சபாநாயகர் இருக்கைக்கு அருகே அமளியில் ஈடுபட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.