இனிமேல் எரிபொருளால் இயங்கும் கார்களை விட, பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் கார்களை வாங்குபவர்களுக்கு சலுகைகள் மற்றும் லட்சங்களில் மானியம் தரப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே முன்னோடி கொள்கையாக இந்தத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய கொள்கை திட்டத்தின் படி, தலைநகர் டெல்லியில் பதிவு செய்யப்படும் பேட்டரி வாகனங்களுக்கு மட்டும் சாலை வரி மற்றும் வான பதிவு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும், மேலும் புதிய பேட்டரி கார் வாங்குபவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “டெல்லியில் வாகன நெரிசல் மற்றும் புகையினால் மாசுபாடு பெருமளவில் தவிர்க்கப்படும். மேலும் இதனால் அதிக அளவு வேலை வாய்ப்புகள் உருவாகும், பொருளாதாரம் வளர சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்
இந்திய நாட்டிலேயே முன்னோடியாக இந்தப் புதிய கொள்கை திட்டத்தினை செயல்படுத்தி உள்ளதாகவும், இந்தக் கொள்கையின் படி, பேட்டரியில் ஓடும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் இ-ரிக்ஷா போன்ற வாகனங்களுக்கு மானியமாக ரூபாய் 30,000 வரை வழங்கப்படுவதாகவும், இந்தக் கொள்கையின் பால் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேட்டரி வாகனங்கள் டெல்லியில் பதிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தப் புதிய கொள்கையின்படி திட்டத்தினை அமல் படுத்துவதற்காக, “எலக்ட்ரிக் வாகன செல்(Electric Vehicle Cell)” என்ற தனிப் பிரிவு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதன்பிறகு டெல்லியில் பேட்டரி வாகன பிரிவு வாரியம் உருவாக்கப்படும், இதன் மூலம் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கான மையங்களை உருவாக்க மானியம் வழங்கப்படும். இதனடிப்படையில் டெல்லியில் ஒரு வருடத்தில் 200 சார்ஜ் மையங்கள் அமைக்கப்படும்” என்றும் முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.