கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்

0
147

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்

 

கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கல்குவாரி உரிமையாளர் சரக்கு வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை அருகேயுள்ள செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிக்கு அருகாமையில் கொலை செய்யப்பட்ட ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது.

 

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செல்வகுமார் நிலப் பிரச்சனை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் செல்வகுமாரின் அந்த கல்குவாரி உரிமம் முடிந்த பின்னரும் இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து கனிம வளத்துறைக்கு அவர் பல்வேறு புகார்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் மூன்று தினங்களுக்கு முன்பாக செல்வகுமாருக்கு சொந்தமான உரிமம் முடிந்து சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்கு சொந்தமான சரக்குவேன் மோதியது. இதில் அடிப்பட்ட ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இந்த சம்பவத்தில் ஜெகநாதன் மீது மோதிய அந்த வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற க.பரமத்தி காவல் நிலைய போலீசார் ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில் சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரியை மூடுவதற்கு காரணமான ஜெகநாதனை அதன் உரிமையாளர் லாரி ஏற்றி கொன்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இதனைத்தொடர்ந்து கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி டிரைவர் சக்திவேல் ஆகியோர் மீது க.பரமத்தி காவல் நிலையப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சட்ட விரோதமாக செயல்பட்ட கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை அதன் உரிமையாளர் சரக்கு வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleநடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் – சத்யராஜ் காட்டம்
Next articleசிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்