பெண் குழந்தைகள் இதனால்தான் நாடக காதலில் சிக்குகிறார்கள் : மகளிர் தின விழாவில் சௌமியா அன்புமணி திட்டவட்டம்!

Photo of author

By Parthipan K

நேற்று மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் பல்வேறு நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துச் செய்தியை கூறியிருந்தனர்.

இதில் அனைத்து தலைவர்களும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியே தங்கள் வாழ்த்து செய்தியை பதிவு செய்து இருந்தனர். பல்வேறு அமைப்புகள் நடத்திய மகளிர் தின விழாவில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பெண்களே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பெண்கள் விழிப்புணர்வு பற்றி பேசினார். அதில் அவர் கூறியதாவது;

‘பெண் பிள்ளைகள் எதனால் தங்களுக்கு பிரச்சனை வருகிறது என்று உணராமலேயே இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு சமூக வலைதளங்களே பிரச்சனைகள் உருவாக காரணமாக விளங்குகிறது.

அவர்கள் யார் என்று தெரியாத பலருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் தங்கள் புகைப்படங்களை முகம் தெரியாத பலர் பார்க்கும்படி பகிர்ந்து விடுகிறார்கள்.

தவறான எண்ணம் கொண்ட சிலர் இவர்கள் எங்கே செல்கிறார்கள் யாருடன் செல்கிறார்கள் போன்ற தகவல்களை எளிதில் தெரிந்து கொள்கிறார்கள். இதையெல்லாம் பயன்படுத்திதான் சில சமூக விரோதிகள் பெண் பிள்ளைகளை மிரட்டி நாடகக் காதலில் சிக்க வைக்கிறார்கள்.

இதுபற்றி பெற்றோர்களும் உறவினர்களும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.