இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது என்னவென்றால்,
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவரை 29-ஆம் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்றைய ராணுவ ஆலோசகராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என அவர் மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் செய்த போர் குற்றங்களை விசாரிப்பதற்காக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி அதை அன்றைய இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டேன் என்று தேர்தல் பரப்புரையில் கோத்தபய தெரிவித்திருந்தார். இன்று அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவசர அவசரமாக இந்திய அரசு கோத்தபாயவுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளது. இது ஈழத்தமிழர்களை மட்டுமன்றி இன்றைய தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐநா தீர்மானத்துக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல. போர்க்குற்ற விசாரணையை நடத்த மாட்டேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கோத்தபய ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது வெளிப்படை ஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே அரணாக இருக்கின்ற இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சிங்கள பேரினவாதத்திற்குத் துணைபோவது ஒட்டுமொத்த தமிழர்களையும் வருத்தம் அடைய வைத்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபய ராஜபக்சவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமென்றும், கோத்தபாயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டுமென்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.