கொரோனா பாதிப்பு – இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை

Photo of author

By Parthipan K

கொரோனாவால் உலகம் முழுவதுமுள்ள நாடுகள் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால் நிதி நெருக்கடியிலிருக்கும் நாடுகள் உலக வங்கி மற்றும் பிற நாடுகளிடம் கடனுதவி கேட்டு வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில், 8,360 கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும் என இந்தியாவிடம் கடனுதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு பிரச்னைகளை சமாளிப்பது குறித்து இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் பேசினார். அந்த உரையாடலின் போது பல்வேறு பிரச்னைகள் பற்றி இரு தலைவர்களும் பேசினர். அப்போது ஊரடங்கினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க தேவையான உதவிகளை இந்தியா செய்வதாக, மோடி உறுதி அளித்தார்.

அவர்கள் உரையாடலின் போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘கரன்சி ஸ்வாப்’ எனப்படும் செலாவணி பரிமாற்ற முறையின் கீழ் இந்திய ரூபாயின் மதிப்பில் 8360 கோடி ரூபாய் கடனுதவி வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து இலங்கை உயரதிகாரிகள் கூறுகையில் ‘SAARC’ எனப்படும் தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் மூலம், இந்திய ரூபாய் மதிப்பில் 3,040 கோடி ரூபாய் கடன் வழங்கும்படி இந்தியாவிடம் இலங்கை ஏற்கனவே கேட்டுள்ளது.

தற்போது, அதைத் தவிர கூடுதலாக, 8,360 கோடி கடன் வழங்க வேண்டும் என, அவர் கேட்டுள்ளார். பொருளாதார சிக்கல்களால், நாட்டின் ரொக்க இருப்பு குறைந்து வருவதை சமாளிக்க இந்த உதவியை செய்யுமபடி இலங்கை அதிபர் கோத்தபய கேட்டுள்ளார்.

இதைத் தவிர, இலங்கையில் நிறுத்தப்பட்ட துறைமுகப் பணிகளை இந்தியா விரைவில் துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்” என்று தெரிவித்துள்ளனர்.