ரஜினியின் அடுத்த படத்தில் ராஜமௌலியின் தந்தை… பரபரப்பாக நடக்கும் பணிகள்!
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் வெளியான தர்பார் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை.
இதையடுத்து அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி அடுத்து டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் திரைக்கதை உருவாக்கத்தில் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையும் பிரபல கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் பணியாற்றுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜமௌலியின் அனைத்து படங்களுக்கும் விஜயேந்திர பிரசாத்தான் கதையாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.