தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக ஆயுஸ் துறை செயலாளர் ராஜேஷ் கோட்சே மீது ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ‘ஆன்லைன்’ பயிற்சியில், “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள்” என ஆயுஷ் செயலாளர் திரு.ராஜேஷ் கோட்சே மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்திருக்கிறார். மத்திய அரசின் செயலாளரே அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறையிலும் மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது எனவும்,
‘ஆங்கிலத்தில் பயிற்சி கொடுங்கள்’ என்று கூறிய தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மீது எரிந்து விழுந்து அவர்களின் பெயர்களையும் கேட்டு அச்சுறுத்தியிருக்கிறார்; கண்ணியமின்றி எல்லை மீறியிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் ‘ என்று திருமதி.கனிமொழியிடம் பேசிய அதிகாரி மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், ராஜேஷ் கோட்சே இப்படி மொழி வெறி பிடித்துப் பேசியிருக்க மாட்டார்.
அதிகாரிகளைப் பேச அனுமதித்து மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது, அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பது தான் எங்களின் திட்டம்’ என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமிழக மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுத்து இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்து விடாமல் உறுதி செய்திட வேண்டும்!
பங்கேற்போரை அவமதிக்கும் தரக்குறைவான போக்கு கைவிடப்படவேண்டும் என்றும், அது போன்ற பயிற்சிகள், கூட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் திரு.பழனிசாமி உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று அந்த கண்டன அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.