ஸ்டாலின் வியூகத்தை இராமதாஸ் என்ற பிரம்மாஸ்திரம் மூலம் காலி செய்த எடப்பாடி

Photo of author

By Parthipan K

ஸ்டாலின் வியூகத்தை இராமதாஸ் என்ற பிரம்மாஸ்திரம் மூலம் காலி செய்த எடப்பாடி

சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக மீண்டும் பழைய கம்பீரத்தோடு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன 44,782 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியிலிருந்து புதிதாக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது இத்தோடு அதிமுக காலி என்று அனைவராலும் பேசப்பட்ட நிலையில் இந்த இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவை உற்சாகப்படுத்தி உள்ளது.திமுகவை கதிகலங்க வைத்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுகவிடம் இருந்து கைப்பற்றியது அதிமுக. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் தோல்வியால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளதாக தெரிகிறது.

காரணம் விக்கிரவாண்டி தொகுதியில் மிகப் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஆகும். இதன் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி அங்கு செல்வாக்குமிக்க கட்சியாக விளங்கி வருகிறது, ஆளும் அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர் சி.வி சண்முகம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வன்னியர்கள் அவருக்கு 100% ஆதரவளித்தனர்,

திமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணங்கள் நிறைய இருக்கின்றன. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர், அதிமுகவை பொருத்தவரை சி.வி சண்முகம் தான் மாவட்ட செயலாளர், அவரை சில காலம் ஒதுக்கி வைத்திருந்த ஜெயலலிதா அவர்கள் லட்சுமணன் அவர்களை மாவட்ட செயலாளராக நியமித்தார், அவரும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான். அரசியல் விவகாரங்களில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேரடியாக வன்னியர்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தந்திரத்தோடு செயல்பட்டார்.

திமுக நிலைப்பாடே வேறு, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளராக பொன்முடி இருந்த காலகட்டத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் அளிக்க மாட்டார், இதனால் அவர் மீது வன்னியர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர், அவர்‌ சார்ந்த சமுதாயத்தை மட்டும் பதவியை அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பவர்.

விழுப்புரம் மாவட்டத்தை கட்சி அமைப்பு ரீதியில் திமுக மூன்றாகப் பிரித்த போது வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட மாவட்ட செயலாளராக நியமிக்கப் படவில்லை. இது அம்மாவட்டத்தில் உள்ள திமுக வன்னியர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது, பொன்முடி உடையார் சமுதாயம், மஸ்தான் முஸ்லிம் சமுதாயம், அங்கையற்கண்ணி யாதவர் சமுதாயம், இதனால் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று கொந்தளித்து வந்தனர்.

பாமகவின் செல்வாக்கு மிக்க தொகுதி என்பதால் அதன் முழு வாக்குகள் அதிமுகவிற்கு சென்றுவிட்டால் தாங்கள் நிச்சயம் தோல்வி அடைவோம் என்று திமுகவினருக்கு ஒரு அச்சம் இருந்தது, இதன் காரணமாகவே திமுகவில் உள்ள முக்கிய வன்னிய பிரமுகர்களை பிரதானப்படுத்தி சட்டமன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது. ஜெகத்ரட்சகன், துரைமுருகன், பன்னீர்செல்வம் போன்றவர்களை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக பேசவிட்டு காடுவெட்டி குரு குடும்பத்திற்கு துரோகம் செய்துவிட்டார் என்றெல்லாம் பேசி வன்னிய இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க பார்த்தனர். ஆனால் காடுவெட்டி குருவுக்கு என்றும் தந்தையாக ராமதாஸ் தான் செயல்பட்டார் என்பதை ஆழமாக பதிந்து வைத்துள்ளனர். திமுக வன்னிய பிரமுகர்கள் ராமதாஸ் மீது சுமத்திய பழியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இதுவும் அவர்களின் தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் ராமதாஸ் அவர்களை பிரச்சாரத்தின் போது கிழவன் என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது வன்னியர்களை கொந்தளிக்க வைத்தது. வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுப்பதாக அறிக்கை விட்ட மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புள்ளி விவரங்களோடு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் திமுக வன்னியர்களுக்கு செய்த துரோகத்தை பட்டியலாக அறிக்கை வெளியிட்டார்.

ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மணிமண்டபம் கட்ட முடியுமா ஏன் தற்போது கட்ட முடியாதா என்று கேள்விக் கணைகளால் மு.க.ஸ்டாலினை திணற வைத்தார், நூற்றாண்டு விழாவை கண்டுகொள்ளாமல் தனது சொந்த செலவில் தான் மகன் ஏ.ஜி.சம்பத் கொண்டாடினார் என்பதை வன்னியர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார் ராமதாஸ் அவர்கள்.

திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பாமகவிற்கு சாதகமாக மாறியது அவர் பேசிய சரக்கு மிடுக்கு எங்கிட்டதான் இருக்கு என்ற புகழ்மிக்க வாசகத்தை சமூக வலைதளங்களில் மூலமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காண்பித்தது மட்டும் அல்லாமல் தொகுதி முழுவதும் பரப்பி விட்டனர். அரக்கோணம் தொகுதியில் நான் வெற்றி பெற்றது காலணி மக்கள்தான் காரணம் என்று திருமாவளவனிடம் ஜெகத்ரட்சகன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, இதனையும் சமீபத்தில் வைரலாக பரப்பிவிட்டனர் பாமகவினர்

ஸ்டாலின், மிகவும் எதிர்பார்த்த ஜெகத்ரட்சகன் என்னதான் செலவு செய்தாலும் தொகுதியில் செல்வாக்கு இல்லை என்பதை நாம் ஏற்கனவே கொடுத்த பதிவில் தெளிவாக எழுதி இருந்தோம்,

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜாதி ரீதியாகவே கையில் எடுத்தார்கள் அதிமுகவினர், எடப்பாடியும் இதற்கு பச்சைக் கொடி காட்டினார், மாவட்ட செயலாளர் பொன்முடியை பதவியிலிருந்து நீக்கினால் ஐந்து ஓட்டுப் போடுகிறோம் என்று சிவி சண்முகம் சொல்ல பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் பேசினார், அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருந்து செயல்பட்டனர் அதிமுகவும் பாமகவும்,

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்பதை பிரதானப் படுத்தியது தேர்தலில் திமுக வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு பெற்றுத்தருகிறோம் என்ற ஸ்டாலின் அறிக்கை எல்லாம் எடுபடாமல் போனதற்கு முழுக்க முழுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் தான் காரணம், தேர்தல் வியூகத்தை சரியாக கணித்து பாமகவின் பலத்தால் அதிமுகவை கம்பீரமாக வெற்றி பெற வைத்தார்.

காடுவெட்டி குரு மரணத்திற்குப் பிறகு வன்னியர்களை பாமகவிலிருந்து பிரித்து விடலாம் என்று நினைத்த திமுக வன்னிய பிரமுகர்கள் மற்றும் லட்டர் போர்டு கட்சிகளும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவால் கதி கலங்கி போய் உள்ளனர்.