2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.
நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் காய் நகர்த்தி வரும் பாஜக அரசுக்கு திமுக பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
தங்களுடன் ஒத்துப்போகத மாநிலங்களில் அமைச்சர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தி அவர்களை பணிய வைப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். சமீபத்தில் கூட அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். இது நடந்து சில நாட்களில் அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூரில் நடந்த ஒரு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ‘டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு எப்போதும் அடிபணியாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ரெய்டு மூலம் மிரட்டி ஆட்சியை அமைக்கும் உங்களின் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது. அமித்ஷா அல்ல. எந்த்ட ஷா வந்தாலும் சரி. உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லாரையும் சேர்த்துக்கிட்டு வாங்க. ஒரு கை பார்ப்போம்.
எங்கள் தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out of Control-தான். 2026-லும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்’ என பேசியிருக்கிறார்.