நீட் தேர்வு தோல்வி எதிரொலி! +2மாணவி தற்கொலை!

Photo of author

By Sakthi

சில வருடங்களாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு காரணமாக, தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முதலில் பலியானவர் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தைச் சேர்ந்த குழுமூர் கிராமத்தில் மருத்துவ கனவுகளோடு இருந்து அனிதா என்ற மாணவி. அவரை தொடர்ந்து பல்வேறு சமயங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் இந்த தேர்வு பயம் காரணமாக, உயிரிழந்தார்கள்.

இந்த நிலையில், இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோல மாநிலத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தளி பேரூராட்சி பாரதி நகரைச் சார்ந்த ஜெயா என்ற 18 வயது மாணவி கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழ்நிலையில், மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தவர் நீட் நுழைவுத் தேர்வையும் எழுதினார்.

சென்ற மாதம் தேர்வு முடிவு வெளி வந்தது இதில் மாணவி ஜெயா 69 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். இதன் காரணமாக, மன வருத்தத்துடன் அவர் காணப்பட்டார். இதனை அறிந்து கொண்ட பெற்றோர் அவரை திருப்பூரில் இருக்கின்ற தன்னுடைய சகோதரி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கு சில வாரங்கள் தங்கி இருந்த ஜெயா தன்னுடைய பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக தெரிவித்துவிட்டு பாரதிநகருக்கு வருகை தந்தார். இந்த சூழ்நிலையில், கடந்த 17ஆம் தேதி யாரும் எதிர்பாராத நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து அவர் விஷம் குடித்து விட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தை சார்ந்தவர்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக கோயமுத்தூர் மாவட்டம் காரமடையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனாலும் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது.

நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதோடு மாணவி ஜெயா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது, அதை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த கடிதத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் என்னால் நிம்மதியாக வாழ இயலவில்லை, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன் அம்மா என்னை மீண்டும் மன்னித்துவிடு என்று கூறியிருக்கிறார்.