மாணவி ஸ்ரீமதி வழக்கு: தாளாளர் மகன்கள் இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் ஏன் இன்னும் கொண்டு வரவில்லை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கேள்வி!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். மாணவி மரணத்திற்கு காரணமான, உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிட வேண்டும். மரணம் அடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா செய்தியாளிடம் பேசியில்.கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீமதிக்கு முன்பாக, ஏற்கனவே 6 மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதுகுறித்தும் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கனியாமூர் பள்ளியில் அனுமதி இல்லாமல் விடுதி இயங்கி வந்துள்ளது. அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவி ஸ்ரீமதியின் இரண்டு கூறாய்வு அறிக்கைகளை குறுகிய காலத்தில் வாங்கி, குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மாணவி ஸ்ரீமதி பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட அந்த நாள் இரவு பள்ளித் தாளாளர் ரவிக்குமாரின் இரண்டு மகன்கள் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டிற்கு தப்பித்துச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.இந்த நிலையில், இவர்களை போலீசார் ஏன் இதுவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவில்லை. உடனடியாக விசாரணை வளையத்திற்குள் இவர்களை கொண்டு வரவேண்டும்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரையும் இந்த வழக்கின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.
அப்போதுதான் மாணவியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும். மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முழுவதும் போராட்டம் தொடரும் என்றார்.