அரசு விடுதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்! உணவுகளை சோதனை செய்யும் அதிகாரிகள்!
சென்னையில் வடபழனி திருநகர் ஹாஸ்டல் சாலையில் தமிழ் நாடு அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது.மேலும் இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
அந்த விடுதியில் தங்கி இருந்த நான்கு மாணவர்களுக்கு திடீரென வாந்தி ,மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.உடன் இருந்த சக மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்க அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீஸார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுதிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு மேலும் 6 மாணவர்களுக்கு வாந்தி ,வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.அதனை கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆறு மாணவர்களையும் கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து இவ்வாறு மாணவர்களுக்கு வாந்தி ,மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு என்ன காரணம் என போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் விடுதியில் வழங்கிய உணவு ஒத்துக்கொள்ளாமல் தான் இவ்வாறு நடந்தது என தெரியவந்தது.
இதனைதொடர்ந்து விடுதியில் சமைத்த ராயப்பேட்டையைச் சேர்ந்த கோகுல்நாத் என்பவரிடம் விசாரணை செய்தனர்.மேலும் சமைக்க பயன்படுத்திய பொருட்கள் ,குடிநீர் போன்றவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.