சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி
சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ரஜினி, கமலை சுற்றியே அரசியல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினி, கமல் போன்ற சினிமா கூத்தாடிகளால் எந்த பயனும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் சுவாமியிடம், ரஜினி அரசியலுக்கு வருவது, ரஜினி – கமல் இணைவது, சசிகலா விடுதலை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமி இதுகுறித்து கூறியதாவது:
சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும் நடிகர்கள் அவர்களது திரைப்படம் வெளியாகும் போது மட்டும் விளம்பரத்திற்காக அரசியலுக்கு வருவதாக கூறி இருக்கலாம் என்றும் இதற்கு முன் பலமுறை அரசியலுக்கு வர போவதாக கூறியிருந்தும் ஒருமுறை கூட எதுவும் நடக்கவில்லை என்றும் கூறினார்.
ரஜினியின் அரசியல் குறித்த சினிமா வசனங்களை பலமுறை கேட்டு அலுத்துவிட்டதாகவும், அவர் அரசியலுக்கு வரமாட்டார், வந்தால் பின்னர் பார்த்து கொள்ளலாம் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
மேலும் அதிமுக.,வை நல்லமுறையில் நடத்தும் திறமை சசிகலாவுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தால் நிச்சயமாக அதிமுக.,வினர் அனைவரும் சசிகலாவிடம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
ரஜினி, கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் இருவரையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது