மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!

Photo of author

By Hasini

மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில்  பொறுப்பு தரப்பட்டது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி இவரது வீடு உள்ளிட்ட இவருக்கு சொந்தமான பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் மட்டும் மொத்தம் பதிமூன்று லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் பணமாகவும், 11 கிலோ தங்கமும், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றினர். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதன் காரணமாக முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாகவும், அவர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். அதில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் மற்றும் சொத்து சேர்ப்பில் ஈடுபட்டதாகவும், அவர் மீது பல்வேறு வழக்குகள் வனத்துறையினரால் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் மிகவும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  எடப்பாடி பழனிச்சாமி அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு போலீசாரின் துன்புறுத்துதல் மட்டுமே காரணம் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் பேரில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதை அடுத்து வேளச்சேரி போலீசார் இதுவரை நடத்தப்பட்ட வழக்கு விவரங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை அதிகாரிகள் நியமித்து அவர் தற்கொலை வழக்கு விசாரணை விரைவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.