ஒவ்வொரு வருடமும் கோடை காலம் வரும்போதும் வெயில் மக்களை வாட்ட துவங்கும். நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர் காணப்பட்டாலும் பிப்ரவரி பாதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிலும் ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த 125 வருடங்களில் இல்லாத வெயில் தமிழகத்தில் பதிவாகியிருந்தது. எனவே, இன்னும் 3 நாட்களுக்கு மாலை 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் மக்களிடம் உணரப்படுகிறது. இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக கோடை காலம் என்பது ஏப்ரல் மாதம்தான் துவங்கும். ஆனால், காலநிலை மற்றத்தால் இந்த வருடம் இந்த மாதமே துவங்கிவிட்டது. பிப்ரவரி மாதமே இப்படி எனில் ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் எப்படி இருக்குமோ என்கிற கலக்கமும் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியிருக்கிறது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102.38 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது. அதேபோல், ஈரோட்டில் 101.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், சேலத்தில் 100.58 டிகிரி பாரன்ஹீட்டும், கரூர் மாவட்டம் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் என வெயில் சுட்டெரித்தது. ஒருபக்கம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் எனவும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், வருகிற 9ம் தேதி வரை இந்த நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம், வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 5 நாட்களை பொறுத்தவரை வெயிலின் போக்கு இன்று முதல் 9ம் தேதி வரை அதிகபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும், சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
கோடை காலம் துவங்கும் முன்பே 4 மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் தாண்டியிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.