சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பு- போராடிய மாணவர்கள்- கல்லூரியை மூடிய கல்லூரி நிர்வாகம்- கண்டனம் தெரிவித்த பாமக.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதால் 43 நாட்களாக இந்த கல்லூரியின் மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். மாணவர்களின் நியாயமான கோரிக்கையை கேட்காமல் அவர்களை கல்லூரியை விட்டு வெளியேற்றி கல்லூரியை இழுத்து பூட்டி உள்ளார்கள்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தனியாரிடம் இருக்கும்போது வசூலித்த ரூ.5.44 லட்சம் (ஒரு ஆண்டுக்கு) அதே தொகையை தற்போது அரசு கட்டுப்பாட்டில் வந்த பிறகும் வசூலிக்கிறது.
அரசு நிர்ணயித்த தொகையான ரூபாய் 11,600(ஒரு ஆண்டுக்கு) யை விட பல மடங்கு தொகையை கல்லூரி நிர்வாகம் வசூலித்ததால் கோபமடைந்த கல்லூரி மாணவர்கள் கடந்த 43 நாட்களாக போராடி வருகிறார்கள்.
மருத்துவ மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற சொல்லி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமான போக்கை கண்டித்துள்ளார் மேலும் கல்வி மற்றும் கல்விக் கட்டணம் விவகாரங்களில் எத்தனையோ சலுகைகளை வழங்கி வரும் தமிழக அரசு, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கல்விக் கட்டணத்தைக் குறைப்பதில் மட்டும் இந்த அளவுக்கு பிடிவாதம் காட்டத் தேவையில்லை. இந்தக் கட்டணக் குறைப்பால் தமிழக அரசுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படப்போவதில்லை.
எனவே, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கான கல்விக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக ரூ.11,600 ஆக குறைக்க வேண்டும். அதன்மூலம் ஏழை வீட்டுக் குழந்தைகளும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதை சாத்தியமாக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.