மூத்த பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ள விவகாரம்!

Photo of author

By Savitha

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், 10 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு 52 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சில மூத்த பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 166 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் ஒரே பட்டியலில் 98 வேட்பாளர்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது.

பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் நேற்று டெல்லியில் கர்நாடக பாஜக கட்சி சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் மற்றும் துணை சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலை ஆகியோர் கூட்டாக நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முதல் கட்டமாக 189 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

189 வேட்பாளர்கள் பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஓபிசி பட்டியலில் 32 வேட்பாளர்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவு (sc) 30 வேட்பாளர்கள், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த (St ) வேட்பாளர்கள் 16, 9 மருத்துவர்கள், பெண்கள் 8 வேட்பாளர்கள் என இடம் பெற்றுள்ளனர்‌.இந்த பட்டியலில் தற்பொழுது பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒரு அமைச்சர் உள்பட 10 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நபர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

10 நபர்களில் முதன்மையாக சூல்யா தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராகவும் மீன் வளத்துறை அமைச்சராக உள்ள ஆங்காராவுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் பெலகாவி வடக்கு சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் அணில் பெநேக்கே, ராம்துர்க் சட்டமன்ற தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகாதேவப்பா, உடுப்பி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி பட், ஹொசதுர்கா பாஜக சட்டமன்ற உறுப்பினர் கோலி‌ஹட்டி சேகர், கப்பு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் லாலாஜி மென்டன், புத்தூர் தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சீவ், சிரஹட்டி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராமன்னா லமானி, குந்தாபூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹாலட்டி, ஹொசதுர்கா கோலிகட்டி சேகர் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட பாஜக கட்சி வாய்ப்பு மறுத்துள்ளது.

தற்பொழுது வெளியாகி உள்ள வேட்பாளர்கள் பட்டியலில் பாஜக கட்சி 52 புதிய நபர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. வேட்பாளர் பட்டியலில் முதன்மையாக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது சொந்த தொகுதியான ஷிகாகான் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான்கு தொகுதிகளில் பாஜக கட்சி சார்பில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் விஜயேந்திரா அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே போல கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆணந்த் சிங் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது விஜயநகரா தொகுதியில் அவரது மகன் சித்தார்த் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிக்கொடி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் கத்தி மறைந்த நிலையில் அவரது மகன் நிக்கி கத்தி போட்டியிடவும் சௌதத்தி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த மாமணி மறைந்த நிலையில் அவரது மனைவி ரத்னா மாமணி போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது‌.

மேலும் பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இருவருக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சித்தராமையா மற்றும் டி கே சிவகுமார் ஆகியோருக்கு எதிராக போட்டியிடும் வகையில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட பாஜக கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கியுள்ளது.

தற்பொழுது வருவாய்த்துறை அமைச்சராக உள்ள ஆர் அசோக் அவரது சொந்த தொகுதியான பத்மநாப நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவதாக கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமாரை எதிர்த்து கனகபுறா தொகுதியிலும் அவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக உட்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சர் சோமண்ணா தனது கோவிந்தராஜ் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருணா தொகுதியில் அவர் சித்தராமையாவுக்கு எதிராகவும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சி சார்பில் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு இஸ்லாமிய வேட்பாளர் கூட இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக உள்ள பத்து நபர்களுக்கு பாஜக கட்சி மேலிடம் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ள நிலையிலும் பல தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு புதிய முகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பாஜக கட்சி தலைமைக்கு எதிராக பாஜக கட்சி தொண்டர்கள் செவ்வாய் கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு நகரில் உள்ள ஜெயநகர் சட்டமன்ற தொகுதிக்கு பாஜக கட்சி சார்பில் வேட்பாளராக கருதப்பட்ட என் ஆர் ரமேஷ் வேட்பாளராக அறிவிக்கப்படாத நிலையில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஜெயநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெலகாவி வடக்கு சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் அணில் பெநேக்கே போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பாஜக கட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

அதேபோல ராம்துர்க் சட்டமன்ற தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகாதேவப்பா போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்களும் அவரது வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‌.

இதேபோல தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னால் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆதரவாளர்களும் தான் கட்சித் தலைமை கோரிக்கையை ஏற்க முடியாது கண்டிப்பாக மீண்டும் போட்டியிடுவேன் என்று தெரிவித்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் ஆதரவாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஈஸ்வரப்பா ஆதரவாளர்கள் சாலையில் டயர்களை வைத்து எரித்து கட்சி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல்துறை அவர்களை விரட்டி அடித்தனர்.