கடந்த சில மாதங்களாகவே பாமக உட்கட்சி விவகாரம் பொது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்ட பிறகு அவர் ஏற்கனவே வகித்த வந்த இளைஞர் அணி தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் இந்த கருத்து வேறுபாடு வெளியே தெரிய ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் இப்பதவிக்கு கட்சியின் கௌரவ தலைவர் GK மணி அவர்களின் மகன் தமிழ்குமரனை நியமிக்கும் போதே அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மூலமாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சமீபத்தில் இப்பதவிக்கு மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமித்த போதும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மூலமாக அதே எதிர்ப்பு கிளம்பியது.
இதில் அவரது ஆதரவாளர்கள் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக இருக்கும் போது அவரை மீறி கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் எப்படி இளைஞர் அணி தலைவரை நியமிக்க முடியும். கட்சி தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்படும் முன்பு வரை அப்பதவிக்கு பெயரளவில் மட்டுமே அதிகாரம் இருந்த நிலையில் பெரும்பாலான முடிவுகளை கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தான் எடுத்து வந்தார்.
இந்நிலையில் திடீரென பாமக தலைவர் பதவிக்கு அதிகாரம் தரும் வகையில் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்க இது மருத்துவர் ராமதாஸ் அவர்களை கொதிப்படைய செய்துள்ளது. மேலும் நிர்வாகிகள் நியமனம் முதல் கூட்டணி விவகாரம் வரை என அனைத்திலும் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தரப்பு அவருக்கான அதிகாரத்தை காட்ட முயற்சிக்க இது மேலும் மருத்துவரை கோபம் கொள்ள வைத்துள்ளது.
இதன் உச்சகட்டமாகவே அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தான் அளித்த பதவியை மாற்றி அவரே தலைவராகவும், அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராகவும் செயல்படுவார் என அறிவித்தார். இதன் பிறகு அன்புமணி ராமதாஸ் தரப்பு அமைதி காக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அண்புமணியின் ஆதரவாளர்கள் கட்சியின் சட்ட விதிகளை காட்டி அன்புமணி ராமதாஸ் தான் தலைவர் என்றும் அவரை நீக்க மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து இரு தினங்கள் அமைதிக்கு பிறகு நேற்று அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் அவர்களும் தனது ஆதரவாளர்கள் கருத்தை உறுதி செய்யும் வகையில் பொதுக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் தன்னை கட்சியின் தலைவராக அங்கீகாரம் செய்துள்ள நிலையில் தானே தலைவராக தொடர்வேன் என அறிவித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு குடும்ப பிரச்சனை, கூட்டணி மற்றும் கோஷ்டி அரசியல் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் குறிப்பாக பாமக தலைவராக பொறுப்பேற்ற பிறகு அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே அனைத்து அதிகாரமும் இருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் முயற்சித்ததே முக்கிய காரணமென கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.இதனால் தான் இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது என குமுறி வருகின்றனர்.
பாமகவினர் மாவீரன் என பெருமை கொள்ளும் மறைந்த காடுவெட்டி குரு உள்ளிட்ட எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு என்பதே இருந்ததில்லை. ஆனால் அன்புமணி ராமதாஸ் தரப்பு நிர்வாகத்திற்கு வந்தது முதல் அவருக்கு எதிரான கருத்துக்கள் அவ்வப்போது எழுந்த நிலையில் இந்த விவகாரத்தில் அது தீவிரமடைந்துள்ளது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.