சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய தமிழக அரசு

Photo of author

By Ammasi Manickam

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் தொடர்ந்து போராடிய தமிழக அரசின் சட்ட போராட்டத்திற்கு இது முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து ஏறக்குறைய 40 நாட்களுக்கு மேல் மதுவிற்கு அடிமையானவர்கள் யாரும் மதுவை தொடாமல் அதிலிருந்து விலகியே இருந்தனர். இந்நிலையில் இந்த வாய்ப்பை வபயன்படுத்தி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் சுதாரித்து கொண்ட தமிழக அரசு தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் ஏற்பாடுகளை செய்தது. இதனையடுத்து பாமக தொடர்ந்த வழக்கில் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் முதல்நாள் வசூல் 170 கோடியை தாண்டியது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகள் அனைத்தும் பெரும்பாலான இடங்களில் மீறப்பட்டன.

குறிப்பாக மதுபானங்களை வாங்க வந்தவர்கள் சரியாக சமூக இடைவெளி இல்லாமல், முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் வரிசையில் நின்றார்கள். மேலும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு கூட்டத்தில் மது வாங்கினார்கள். இதனால் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ள கொரோனா மீண்டும் டாஸ்மாக் காரணமாக பரவும் அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நிபந்தனைகளை மீறியதாக டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாமக வழக்கறிஞர் பாலு,வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மைய்யம் வழக்கறிஞர் ஆகியோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்தது. இன்று நடந்த இந்த மனு மீதான விசாரணையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.