புகழ் பெற்ற கோவிலில் தசராவை ஒட்டி இன்று சூரசம்ஹாரம்!
தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. சில புகழ்பெற்ற கோவில்களில் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனை மொத்தம் 10 முதல் 12 நாட்கள் வரை கோவிலுக்கு ஏற்றவாறு கொண்டாடுவார்கள். அதுபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளான இன்று நள்ளிரவில் சூரசம்காரம் நடைபெறவுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கொரோனாவின் தடுப்பு நடவடிக்கையாக கோவில் விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க கூடாது என அரசு தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டி ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
தற்போது கொரோனா தொற்றின் காரணமாக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அதன் காரணமாக சாமி திரு வீதி விழா கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழாவின் முக்கிய நாட்கள், வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதி அளிக்க அரசு மறுத்துள்ளது.
அதன் காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவையொட்டி வெவ்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் விரதமிருந்து காப்புகட்டி, பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் தசரா குழுவினர் வீதி வீதியாக கலை நிகழ்ச்சி நடைபெற்று வசூலித்து வருகின்றனர். அதன் காரணமாக தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களை கட்டியுள்ளது. எட்டாம் நாளான புதன்கிழமை இரவு கமல வாகனத்தில் கஜலக்ஷ்மி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளினார்.
ஒன்பதாம் நாளான நேற்று அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் எழுந்தருளி மக்களுக்கு ஆசி வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் பத்தாம் நாளான இன்று நள்ளிரவில் பக்தர்கள் யாரும் இன்றி மிக எளிமையாக நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. அதனை முன்னிட்டு அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 12 மணிக்கு கோவில் முன்பாக அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். 11 ம் நாளான நாளை இந்த விழாவிற்கு பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மாலை 5 மணி அளவில் காப்புக் களைதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் காப்பு களையும் நிகழ்ச்சிக்காக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து விசேஷங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு வருவதன் காரணமாக அரசு நெறி முறைகளை பயன்படுத்தி கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது கோவில் நிர்வாகம்.