அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்!! சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு!!
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு.
கோலாரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில், அனைத்து கொள்ளையர்களும் மோடி என்ற குலப்பெயரையை ஏன் கொண்டிருக்க வேண்டும் என பேசியதற்கு ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அவதூறு வழக்கை சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எச்.எச். வர்மா விசாரித்தார். இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்றும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 23-ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் வகையில் தீர்ப்பை 30 நாள்களுக்கு நிறுத்தி வைத்து, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த தீர்ப்புக்கும், தண்டணைக்கும் இடைக்கால தடை கோரி சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து, ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய புர்னேஷ் மோடிக்கு உத்தரவிட்டதுடன், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
ராகுல் காந்தியுடன், அவரது சகோதரி பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், ஹிமாசல முதல்வர் சுக்வீந்தர் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.