ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க உள்ள சுரேஷ் ரெய்னா! ஆனால் வீரராக அல்ல!!

Photo of author

By Parthipan K

ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க உள்ள சுரேஷ் ரெய்னா! ஆனால் வீரராக அல்ல!!

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. இந்தமுறை வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகமொத்தம் இந்த முறை 10 அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கின்றன. ஐபிஎல் போட்டிகள் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் 600 வீரர்கள் ஏலம் விடப்பட்டு அதில் 204 வீரர்கள் விற்கப்பட்டனர். இந்த மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. சென்னை அணியாலும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது. இதனால் சென்னை ரசிகர்களுக்கு இது கவலையை ஏற்படுத்தியது.

மெகா ஏலத்தை தொடர்ந்து, அனைத்து அணிகளும் ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராகி வரும் இந்த சூழலில், குஜராத் அணியில் இருந்த ஜேசன் ராய் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை குஜராத் அணியில் சேர்க்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவருக்கு பதிலாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களுக்காக அந்த பணியை ஒப்புக்கொண்டுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.