ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு..தப்பியது எம்.பி.பதவி!!

Photo of author

By Divya

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு.. தப்பியது எம்.பி.பதவி!!

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி சமூகத்தவரை குறித்து அவமரியாதையாக பேசினார் என்று ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இந்நிலையில் ‘மோடி’ என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி என்பவர் மோடி என்ற ஒட்டு மொத்த சமூகத்தையே ராகுல் காந்தி இழிவுபடுத்தி விட்டார்.அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனால் ராகுல் காந்தி வகித்து வந்த எம்.பி. பதவி

தீர்ப்பு வழங்கிய அடுத்த நாளேபறிபோனது.

இந்நிலையில் இதனை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனு மீது பதிலளிக்க குஜராத் அரசுக்கும்,குஜராத் எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தது.இதனை தொடர்ந்து புர்னேஷ் மோடி தாக்கல் செய்த பதில் மனுவில்

ஒரு சமூகத்தினரின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஆணவக்குணம் கொண்டவராக ராகுல் காந்தி இருக்கின்றார் என்றும் அவரது மேல்முறையீட்டு மனுவை அபாரதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.இந்த பதில் மனுவிற்கு விளக்கமளிக்கும் வகையில் ராகுல் காந்தி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிர்வரும் கூட்டத்தொடரிலும் பங்கேற்கும் வகையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

இதனை தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும்,மேலும் இவருக்கு வழங்கப்பட்ட தண்டனையால் ஒரு எம்.பி. மட்டுமல்ல ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று தெரிவித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி மீண்டும் அவருக்கு கிடைத்திருக்கிறது.இதனை தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடரில் அவர் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.மேலும் அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளதென்றும் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த தீர்ப்பால் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.