சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு திமுக எம்பி. டி.ஆர்.பாலு எதிர்ப்பு
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு சேலம் மாவட்ட விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மக்களவையில் திமுக குழுத் தலைவரான டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
மக்களவையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற 2019-2020-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் இது குறித்து அவர் பேசியதாவது:
சேலம் உருக்காலை பிரச்சனை தொழிலாளர்களால் ஏற்படவில்லை. அதன் நிர்வாகத்தால் ஏற்பட்டது. தற்போது, அரசு அளித்த வாக்குறுதியின்படி சூரிய சக்தி மின்நிலையம் கொண்டுவரப்படவில்லை. அப்படி கொண்டு வந்திருந்தால் செலவில் ரூ.30 கோடி குறைந்திருக்கும். ஆலை அமைக்க 4 ஆயிரம் விவசாயிகள் தங்களது நிலத்தைக் கொடுத்துள்ளனர். இதனால், அந்த ஆலையை மூன்றாவது நபருக்கோ, தனியாருக்கோ தாரைவார்க்க விவசாயிகள் அனுமதிக்கமாட்டார்கள்.
இந்திய ரயில்வே நிர்வாகம் சேலம் உருக்காலையில் இருந்து ஆண்டுக்கு 5,575 டன் ஸ்டீலை வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது இந்த ஆண்டு 121 டன் மட்டுமே வாங்கியுள்ளது. இது இந்த ஆலை குறித்த அக்கறை ஏதும் இந்த அரசுக்கு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
இதே நிலைதான் சேது சமுத்திர திட்ட விவகாரத்திலும் இருந்தது. இத்திட்டம் வாஜ்பாய் திட்டம் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கனவுத் திட்டத்தை 150 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாக்கும் வகையில் வாஜ்பாய் கொண்டு வந்தார். இத்திட்டம் குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. வாஜ்பாயை மறந்துவிட்டீர்களா? இது பாஜகவின் திட்டம். நான் செயல்படுத்த ஆரம்பித்தேன் அவ்வளவுதான். ஆனால், அதைப் பாழாக்கிவிட்டனர். இத்திட்டத்தை மீண்டும் எடுத்து உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இது அரசின் கொள்கை விவகாரமாகும்.
இதுமட்டுமில்லாமல் மேலும், கத்திப்பாரா -பூந்தமல்லி, விமான நிலையம் – வண்டலூர், திருமங்கலம் – அம்பத்தூர் ஆகிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை நீட்டிக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு செயல்படுத்த நினைத்த சேது சமுத்திர திட்டத்தை பற்றியெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. திமுக எம்.பியான இவருக்கு பாஜக தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுக்குமா என்பது கேள்வியே?