சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! 6 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்படுகிறது..!!

Photo of author

By Parthipan K

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் இன்று முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை, கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் பொது முடக்கத்தில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் 6 மாத காலத்திற்குப் பிறகு, இன்று முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. தாஜ்மஹாலில் ஒரு நாளுக்கு 5000 சுற்றுலாப் பயணிகளும், ஆக்ரா கோட்டையில் 2,500 சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தாஜ்மஹால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஆக்ரா கோட்டை ஞாயிற்றுக் கிழமையிலும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.