ஆப்கானிஸ்தானில் அரச படைக்கும், ஆயுதம் தாங்கி போராடும் தாலிபன் படைக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக தாலிபன்களுக்கு எதிராக போரிட்டு வந்தனர். தற்போது அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்டு வருகிறது. அதே போன்று நேட்டோ படைகளும் திரும்பப் பெறுவதால், அவைகள் போரில் பங்கேற்கவில்லை.
இது தாலிபன்களுக்கு சாதகமாக மாறியதால், புது உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளை முதலில் கைப்பற்றினர். தொடர்ந்து அரசப் படைகளுக்கு எதிராக போரை தீவிரப்படுத்தினர். இதனால், அரசு செய்வதறியாது மற்ற நேச நாடுகளை நாடி வருகிறது. அதே நேரத்தில், தாலிபன்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த 2 நாட்களாக போர் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று முந்தைய நாள் 2 மாகானங்களை முழுமையாக கைப்பற்றிய நிலையில், நேற்று அதிரடித் தாக்குதல் நடத்தி டலோகன், குண்டுஷ், சர்-இ-பெல் ஆகிய 3 மாகானங்களை கைப்பற்றியுள்ளனர். சர்-இ-பெல் மாகானத்தில் காவல்துறை தலைமையகத்தையும் அதிரடியாக கைப்பற்றியதால், அதனை மீட்கும் முயற்சியில் ஆப்கன் படைகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே, ஜாஸ்ஜன் மாகானத்தின் தலைநகரில் புகுந்த தாலிபன்கள் அங்கிருந்த சிறையை கைப்பற்றி, கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 700க்கும் மேற்பட்ட தங்களது ஆதரவாளர்களை விடுவித்து போரில் ஈடுத்தியுள்ளனர். இது ஆப்கன் அரசுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்தவர்கள் கைதேர்ந்த போராளிகள் என்பதால், அவர்கள் அடுத்தடுத்த தாக்குதலை நடத்தக்கூடும். இதனால், ஆப்கன் அரசு செய்வதறியாது தவித்து வருகிறது.
தலைநகர் காபுலைச் சுற்றியுள்ள பெரும்பாலான மாகாணங்களை தாலிபன்கள் பிடித்துள்ள நிலையில், காபுலிலும் அவ்வபோது தாக்குதல் நடைபெற்று வருகிறது. அரசுக்கு ஆதரவாக காபுலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், ஆப்கனை முழுமையாக கைப்பற்றி தாலிபன்கள் ஆட்சி அமைத்தாலும், அதனை அங்கீகரிக்க மாட்டோம் என ஐ.நா. பாதுகாப்பு அவையில் இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்துள்ளது.