ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்து ஒரு வருட காலம் நிறைவடைந்த நிலையில், அந்த நாட்டில் நோயும், பசியும், துயரமும், மட்டுமே நிறைந்திருக்கிறது.
சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் என்று அறிவித்தார்கள். இந்த நிலையில், தங்களுடைய ஒரு வருட கால ஆட்சி நிறைவடைந்ததை கொண்டாடும் விதத்தில் துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் தலைநகர் காபுல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் நேற்று வலம் வந்தனர். அப்போது இஸ்லாம் வாழ்க அமெரிக்காவுக்கு மரணம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழங்கியதாக சொல்லப்படுகிறது.
தாலிபான்களை உலக நாடுகள் அனைத்தும் புறக்கணித்ததன் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்து வந்த பொருளாதார உதவிகள் தடைபட்டனர். இதனால் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல் அந்த நாடு கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
அதோடு பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைக்கு செல்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக, ஒரு வருடத்திற்கு பிறகும் சிறுமிகள், டீன் ஏஜ் பெண்கள் உள்ளிட்டோர் இன்னும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். அதோடு பெண்கள் பொது இடங்களில் தலை முதல் கால் வரையில் தங்களுடைய கண்களை மட்டுமே காட்ட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் அந்த நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேநேரம் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஊழல் ஒழிப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள் சாகுபடி உள்ளிட்டவை தாலிபான்களின் ஒரு வருட கால சாதனைகள் என்று கூறப்பட்டுள்ளது.