பெண் என்பதால் விரட்டிய தாலிபான்கள்! ஆப்கனில் அடக்குமுறை!
ஆப்கானிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய அமைப்பான தாலிபான் அமைப்பு கடந்த வாரம் நுழைந்து அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.இந்த அமைப்பானது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பாதலால் இவர்களின் சட்டமானது மிகவும் பழைமைவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.முக்கியமாக பெண்களும் குழந்தைகளும் சுதந்திரமாக இருக்கவே முடியாது.ஆண் துணையோடுதான் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை அவர்கள் விதிப்பர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.தங்களுக்கு ஏற்படப்போகும் அடக்குமுறைகள் இனிமேல் அதிகரிக்கப்போவதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.இதனிடையே ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண்ணான ஷப்னம் தவ்ரான் வழக்கம்போல தன்னுடைய பணிக்கு சென்றுள்ளார்.ஆனால் தாலிபான்கள் அந்த செய்தி நிறுவனத்தைக் கைப்பற்றி அந்த பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு விரட்டியுள்ளனர்.பெண் என்ற காரணத்தாலும் ஆட்சி மாறியதால் தாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வழியின்றி வீட்டுக்குச் சென்றுள்ளார்.தான் அரசு செய்தி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் அங்கு தன்னைப் போன்ற பல நபர்கள் பணிபுரிவதாகவும் பெண்களுக்கு மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய அனுமதியில்லை என தாலிபான்கள் தெரிவித்ததாகவும் கூறினார்.பெண்கள் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் அனுமதிப்பதாக தாலிபான்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.இதனால் தான் அவர் பணிக்கு சென்றதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த விட்டு வெளியேற வாய்ப்புக் கிடைத்தால் வெளியேறி விடப்போவதாகவும்,தனக்கு யாரேனும் உதவி புரியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.இங்கு இனிமேல் எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைத்தால் பயமாக இருக்கிறது எனவும் அவர் கூறினார்.தாலிபான்கள் பெண்களின் உரிமை பாதுகாக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.