சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்! பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தமிழகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.
இன்று சிங்கப்பூரில் முக ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் பற்றி கூறி முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
உலகத் தரத்திலான திறமைகள், போதுமான உள்கட்டமைப்பு, ஸ்திரமான கொள்கை ஆகியவற்றுடன் விருப்பமான முதலீட்டு தளமாக தமிழ்நாடு உள்ளது என்று கூறிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் முதலீடு செய்ய அடுத்த வருடம் அதாவது 2024ம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், டான்சிம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவறம், பேம் டிஎன் ஆகிய நிறுவனங்கள் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த நிறுவனங்களுடன் பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் செய்தது.