தமிழகத்தில் இன்று (அக். 22) முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்திருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் உணவகங்கள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் இரவு 9 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டும், பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்கும் அவசியத்தை கருத்தில் கொண்டும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டும் தமிழகம் முழுவதும் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் இன்று (அக். 22) முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த சூழலை நீடிக்க எதிர்வரும் பண்டிகை காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் தடுக்க பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.