காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்
காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் திறமையாக செயல்பட்டதற்கான தரவரிசையில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் அமைப்பு சார்பில் (டாடா நிறுவனத்தின் துணை நிறுவனம்) கடந்த 2019-ம் ஆண்டுமுதல் நாட்டில் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’ என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்படுகிறது.
இதன்படி கடந்த 2022-ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின்படி, மேற்கண்ட 4 படிநிலைகளிலும் நாட்டிலேயே முதல் இடத்தை கர்நாடகம் பிடித்துள்ளது. 2-வது இடத்தை தமிழ்நாடு பிடித்து இருக்கிறது.
தெலுங்கானா, குஜராத், ஆந்திரபிரதேசம், கேரளா, ஜார்கண்ட், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து உள்ளன.
சிறிய மாநிலங்களைப் பொறுத்தவரை நாட்டிலேயே முதல் மாநிலமாக சிக்கிம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அருணாசலபிரதேசம், திரிபுரா, மேகாலயா, மிசோரம், இமாச்சலபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தனித்தனியாக காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கல் என எடுத்துக் கொண்டால் சிறை மற்றும் நீதித்துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதேநேரத்தில் காவல்துறையில் 6-வது இடத்தையும், சட்டஉதவி வழங்கலில் 12-வது இடத்தையும் பிடித்து இருக்கிறது.
கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டு அறிக்கைகளை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் நிலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது.
அதாவது 2019-ம் ஆண்டில் காவலில் முதல் மாநிலமாக இருந்த தமிழ்நாடு 2020-ம் ஆண்டு 5-வது இடத்தையும், 2022-ம் ஆண்டு 6-வது இடத்தையும் பிடித்துள்ளது.
சிறைத்துறையில் 2019-ம் ஆண்டு தமிழ்நாடு 10-வது இடத்தைப் பிடித்து இருந்தது. 2020-ம் ஆண்டு 6-வது இடத்துக்கு முன்னேறி 2022-ம் ஆண்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
நீதித்துறையை பொறுத்தமட்டில் கடந்த 3 ஆண்டுகளிலும் தமிழ்நாடே முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட உதவி வழங்கலில் 2019-ம் ஆண்டு 12-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2020-ம் ஆண்டு 11-வது இடத்துக்கும், 2022-ம் ஆண்டு மீண்டும் 12-வது இடத்துக்கும் சென்றுள்ளது.
இந்த அறிக்கை பட்ஜெட், மனிதவளம், உட்கட்டமைப்பு, பணிச்சுமை போன்ற அளவீடுகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.