கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற உடல் உறுப்பு தான தின நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று ‘டிரான்ஸ்டான்’ ஆண்டு அறிக்கையை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், ‘டிரான்ஸ்டான்’ உறுப்பினர் செயலாளர் டாக்டர் காந்திமதி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு ஆகியோரும் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் விழாவில் பேசியபோது இந்தியாவிலேயே முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் கடந்த 2014-ம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 1,382 கொடையாளர்களிடமிருந்து 8,163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 முறையாக தமிழகம் முதலிடம் வகித்து மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழை எளிய மக்களுக்காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த கொரோனா தொற்று பரவும் நிலையிலும், நெறிமுறைகளை உருவாக்கி தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தமிழகம் சாதனை படைத்துள்ளது என கூறினார்.